Saturday, July 17, 2021

நீங்கா நினைவலைகள் - 23

 நீங்கா நினைவலைகள் - 23

- பாலசாண்டில்யன் 

மீண்டும் என்னை சுங்குராமா தெரு ஆபீசுக்கு கூப்பிட்டு அனுப்பினார் எம் டி. "இரண்டு நாட்கள் முன்பு பார்த்தோமே அந்த புதிய பாக்டரிக்கு நீ தான் இன்ச்சார்ஜ். நாளைக்கே நீ அங்கு போகலாம். இம்போர்ட்டட் டைலரிங் மெஷின் 150 வரும், லெதர் வரும். இதர பொருட்கள் வரும். பாக்டரி செட் செய்ய என்ன செய்யலாம் என்று பிளான் போட்டு எனக்கு அனுப்பு" என்று சொல்லி அனுப்பி விட்டார். கண்ணை கட்டிக் காட்டில் விட்ட கதை எனலாம் இல்லை என்றால் குருவி தலையில் பனங்கா எனலாம்.

மறுநாளே நான் கந்தன்சாவடி போய் சேர்ந்தேன். எங்கள் வீட்டில் இருந்து பாரீஸ், அயனாவரம், கந்தன்சாவடி எல்லாமே 10 முதல் 11 கிமீ தூரம் தான். எக்கச்சக்க வேலை. அது ஊராட்சி ஒன்றியம் என்பதால் நிறைய பேரை பார்த்து நிறைய 'பார்மாலிட்டி' முடிக்க வேண்டி இருந்தது. லோக்கல் போலீஸ் ஸ்டேஷன், லோக்கல் பேக்டரி இன்ஸ்பெக்டர், அக்கம் பக்கம் என்று பலரை சென்று பார்த்தேன். எனக்கென சிலரை எம் டி யிடம் சொல்லி ட்ரான்ஸ்பர் செய்யச் சொன்னேன். பெட்டி காஷ் வந்தது. எல்லா ரூம்களுக்கும் பூட்டு வாங்கினேன். சில செடிகள் வாங்கி வைக்க ஏற்பாடு செய்தேன். பின்னால் இருந்த கோடோனில் இருந்த தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே போட்டு கொஞ்சம் காசாக்கி வைத்துக் கொண்டேன். 

மெஷின், லெதர், சாமான்கள் என்று ஓயாமல் வந்து இறங்கின. ஒவ்வொன்றையும் அருகில் இருந்து இறக்கி வைத்து, அவற்றை வைத்து பூட்டி மிகச் சரியாக இருந்தது. ஓரிரு நாட்கள் இடைவெளியில் எதுவும் நடக்கவில்லை. என்னை ஜாகிட், அவர் தம்பி அர்ஷத், நான் மூவரும் இரண்டு பைக்கில் மஹாபலிபுரம் (அங்கிருந்து சுமார் 30 கிமீ தூரத்தில் இருந்தது). எனக்கு நல்லதொரு அனுபவமாக இருந்தது. அப்போது மொபைல் போன் எல்லாம் கிடையாது போட்டோ எடுக்க. மற்றபடி சுற்றிப் பார்த்து திரும்பினோம். எனக்காக ஒரு முறை அவர்கள் இருவரும் திருப்போரூர் கோவிலுக்கு வந்தார்கள். அதற்கு பிறகு வேலை செம்ம டைட். மூச்சு விட நேரமில்லை. 

நானே ஆட்களை வேலைக்கு எடுக்க புதிய முறைகளை கண்டு பிடித்தேன். எனக்கு அனுப்பப்பட்ட ரிஜெக்ட் லெதரை கட் செய்ய வைத்து 'கட்டர்கள்' பொசிஷனுக்கு ஆட்கள் எடுத்தேன். பிறகு கார்மெண்ட்டில் வைத்துத் தைக்க லைனிங் டைலர்களை அழைத்து அவர்களை தைக்கச் சொல்லி டெஸ்ட் வைத்து தேர்வு செய்தேன். பிறகு லெதர் டைலர்களை அழைத்து ஆளுக்கு ஒரு கார்மெண்ட் தைக்கச் சொல்லி அவர்களை தேர்வு செய்தேன். ஆக சுமார் 200 லெதர் கார்மெண்ட்ஸ் எந்த செலவும் இல்லாமல் செய்து வாங்கினேன். (எனக்கு பக்க பலமாக ஜாஹிட், அர்ஷத், ராமச்சந்திரன், என்று சிலர் இருந்தனர்.) எம் டி ஹெட் ஆபீஸ் கூப்பிட்டு நான் செய்த அந்த 'ஆளெடுப்பு' சூத்திரத்தை அயனாவரம், மற்றும் பெரம்பூர் பாக்டரி ஆட்களுக்கும் ஹெட் ஆபிஸ் ஆட்களுக்கும் எடுத்துச் சொல்லி ஒரு சின்ன பாராட்டு விழாவே தந்தார். 

அப்படி நான் என்ன தான் செய்து இருக்கிறேன் என்று ஆவலுடன் வந்து பார்த்து என்னை மிகுந்த பெருமையுடன் (சற்று பொறாமையுடன்) கட்டித் தழுவி பாராட்டினார் ஜி எம் சுரேஷ் சார். எம் டி பூஜை செய்து பிறகு ப்ரொடக்ஷன் தொடங்கலாம் என்று சொல்லி இருந்தார். அதன்படி மிக அருமையாக எல்லாம் தொடங்கியது. நாங்கள் ஆளெடுப்பு சமயம் செய்த கார்மெண்ட்ஸை இன்ஸ்பெக்ஷன் செய்து அவற்றையும் எக்ஸ்போர்ட் செய்ய ஏற்பாடு செய்தார் எம் டி.. அப்படி வேலைக்கு ஆள் எடுப்பதன் மூலம் கூட நிறுவனத்திற்கு வருமானம் ஈட்ட முடியும் என்பதை நான் உட்பட யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. (நானே எனக்கு 'பலே பாலா' என்று சொல்லிக் கொண்டேன். 

நான் வாசலில் ஒரு போர்ட் வைத்து 'தினம் ஒரு மேற்கோள்', 'தினம் ஒரு திருக்குறள்', பிறகு 'தினம் ஒரு ஹிந்தி வார்த்தை' என்று புதுமையாக செய்ய ஆரம்பித்தேன். 28-29 வயதில் ஒரு முரட்டு சிங்கமாக ஆனேன். எனது பெரிய ரூமில் இருந்து பார்த்தாலே பேக்டரி முழுவதும் தெரியும். தவிர எனக்கு பார்க்க பால்கனி காலரி வேறு இருந்தது. இருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பாக்டரி முழுவதும் வலம் வருவேன். 'பாலா சார்' என்று கிசுகிசுக்கும் குரல் கேட்கும். ஒரு குட்டி டெரர் ஆனேன். அப்போது எனக்கு மிகவும் கோபம் வரும். தினமும் போர்டிகோவில் ஸ்டாண்ட் போட்ட டூவீலர் மீது உட்கார்ந்து இருப்பேன். 'ஏன் லேட்' என்று கேட்க மாட்டேன். என்னைப் பார்த்ததுமே எல்லோரும் 'குட் மார்னிங்' என்று சொல்லி அலறி அடித்துக் கொண்டு உள்ளே போவார்கள்.  அடுத்த நாள் லேட்டாக வர பயப்படுவர். நான் முதலில் பாக்டரி போய் கடைசியில் தான் கிளம்புவேன். என் ஸ்கூட்டர் பின்பு என்னை கார்டு செய்ய குறைந்தது மூன்று நான்கு பேர் பைக்கில்  வருவார்கள்.அப்போது ஓ எம் ஆர் ரோடில் கந்தன் சாவடி முதல் மத்ய கைலாஷ் வரை தெரு விளக்கு கூட கிடையாது. இரண்டு புறமும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கும்.

ஓரிரு வருடங்கள் கழிந்தது. சுரேஷ் சார் சொந்தமாக பிசினஸ் தொடங்கி விட்டார். ஹெட் ஆபீஸ் மார்ஷல் ரோட்டுக்கு ஏர் இந்தியா பில்டிங்கில் மாறி இருந்தது. அப்படியே பாரீன் ஸ்டைலில் இன்டீரியர் டெகரேஷன். அங்கே ஏற்கனவே சுரேஷ் இடத்தில் போடப்பட்ட வேறு ஒரு அதிகாரியும் வெளிநாடு சென்று விட்டார். இப்போது மிகப்பெரிய பன்னாட்டு தோலாடை நிறுவனத்தில் இருந்து ஒருவரை வரவழைத்து அவரை கந்தன் சாவடி பாக்டரிக்கு இன்ச்சார்ஜ் ஆக அப்பாய்ண்ட் செய்து என்னை ஹெட் ஆபீஸ் வரவழைத்து அருமையான காபினில் அமர வைத்தார். அதற்கேற்ற பொறுப்புகளும். ஹேமந்த் இப்போது அயனாவரம் பாக்டரி இன்ச்சார்ஜ். தினேஷ் துகர் பெரம்பூர் பாக்டரி இன்ச்சார்ஜ். இப்போது எல்லா பாக்டரி மேனேஜர்களும் எனக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று ஆனது. நான் அடிக்கடி எல்லா பாக்டரிகளுக்கும் போக வேண்டும்.  எம் டி சார் என்னை அவரது அருகில் வைத்துக் கொண்டார். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.

ஹெட் ஆபீஸ் மாற்றல் ஆகி வந்தவுடன் நான் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ISTD நிறுவனம் வழங்கிய டிப்ளமோ இன்  ட்ரெயினிங் அண்ட் டெவெலப்மென்ட் படிப்பில் சேர்ந்து எனது படிப்பை தொடர்ந்தேன். பிறகு டிப்ளமோ இன் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் கூட முடித்தேன் (நிறுவனத்தின் எல்லா இம்போர்ட்ஸ் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட காகிதங்களில் நான் தான் சைன் செய்யும் பொறுப்பில் இருந்தேன். அதே போல பி எப் மற்றும் இ எஸ் ஐ சம்பந்தமான காகிதங்களிலும் என்னையே சைன் பொறுப்புக்கு உள்ளாக்கினர் எம் டி). பின்னர் டிப்ளமோ இன் ISO 9000 and TQM படிப்பும் முடித்தேன். எல்லாமே தபால் வழிக்கல்வி தான். எல்லாமே நான் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை சமாளிக்க எனக்கு மிகவும் தேவைப்பட்டது. என்னுடைய வலது கரமாக விளங்கியது நண்பர் எல் ஆர் ஸ்ரீதர் தான். (இன்றும் இலங்கையில் இருந்து என்னுடன் தொடர்பில் இருக்கிறார்). அவர் தான் எங்கள் ஷிப்மென்ட் நேரத்திற்கு கிளம்பவும் அதற்கேற்ப வங்கியில் எங்களுக்கு பணம் வந்து சேரவும் உதவிய முக்கிய நபர்.

இது பாரலல் டிராக் :

அது 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  என் தந்தை (மறைந்த திரு E S கல்யாணராமன்) என்னை அவர்கள் எழும்பூரில் பணி புரிந்த ரயில்வே அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தார்கள். என்னை ஒரு அலுவலக அதிகாரியின் சீட்டில் உட்காரச் சொல்லி விட்டு எனக்காக கேன்டீனில் பக்கோடா வாங்கி வருவதாகச் சென்றார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. 

 

சுற்றிலும் பார்த்தேன், ஒரு ஈ எறும்பு கொசு கூட அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் அறிகுறி எனக்குத் தென்படவில்லை. எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். சத்த சத்தமாக ஜோக் அடித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு முதல் நாள் தான் எனது பெரியப்பாவின் மகள் அனுராதா என்னை விட ஆறு ஏழு மாதம் வயதில் பெரியவள், ஆனால் வகுப்பில் ஓர் ஆண்டு குறைந்தவள். வித்யோதயா பள்ளியில் ஆங்கிலப் பள்ளியில் 11ஆம் வகுப்பில் இருந்தாள். அவளது பள்ளி ஆண்டு மலரில் இரண்டு தமிழ் கவிதைகள் எழுதியதாக எல்லோருக்கும் காட்டி பாராட்டைப் பெற்றுக் கொண்டிருந்தாள். அவள் ஓவியம் வரைவது, அருமையாக ஆங்கிலம் பேசுவது, சமைப்பது, வீணை வாசிப்பது என்று பல்கலை வித்தகி (அவள் தான் பின்னாளில் என் அத்தை பையன் சேகரைத் திருமணம் செய்து கொண்டாள்). எனக்கு லைட்டாக பொறாமை என்று சொல்லவும் வேண்டுமோ? அந்த நிகழ்வினை நான் அந்த ரயில்வே அலுவலகத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். அங்கே இருந்த ஒருவரிடம் சில காகிதங்களும் ஒரு பேனாவும் வாங்கிக் கொண்டேன். 

 

அந்த மதிய நேரத்தில் இரண்டு முக்கிய விஷயங்கள் எனது வாழ்வில் நடந்தன. ஒன்று நான் நிச்சயம் பின்னாளில் அரசுப் பணியில் சேர மாட்டேன் என்ற முடிவு. மற்றொன்று அனுராதாவை நினைத்துக் கொண்டு அந்தக் காகிதங்களில், 'மலை', 'மயில்', 'கடல்' இது போன்ற மொக்கை தலைப்புகளில் கவிதைகள் நான்கோ ஐந்தோ எழுதினேன். அவை கவிதைகள் என்று சொல்லி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வீடு வந்து எல்லோரிடமும் காட்டினேன். யாரும் பெரிதாக அவற்றைப் படித்து விட்டு சிலாகிக்கவில்லை. எனது அம்மா மட்டும் சொன்னார், பரவாயில்லை நல்ல முயற்சி என்று. அப்பாவிடம் நான் காட்டவே இல்லை. பின்னாளில் தான் தெரிந்தது என் அம்மா நூற்றுக்கும் மேலாக தானே பாடல்கள் எழுதி இசையமைத்து வைத்து இருந்தாள். அந்தத் திறனை எனக்கும் அளித்து இருந்தாள் என்று. 

 

 

1987 ஆம் ஆண்டு, நான் பாம்பே மஸ்கட் வேலைகள் முடித்து சென்னை திரும்பி விட்ட சமயம் மேற்கு மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் தான் நாங்கள் குடியிருந்தோம். எதிர் வீட்டு ஸ்வயம்வராலயா ஜானகிராமன் அண்ணா எனக்கு அறிமுகம் ஆனார். அப்போது எனது அடுத்த வீட்டில் தான் அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் ஐயா குடியிருப்பதாக சொல்லி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்று நான் எழுதிய கவிதைகளை தொகுத்து 'தலையுதிர்காலம்' என்று சிறு புத்தகம் வெளியிட ஆசையோடு அவரை சந்தித்தேன். எனது இயற்பெயரை சொல்லி விட்டு, எனது புனைபெயர் 'பாலசாண்டில்யன்' என்று சொன்னேன். உடனே ஐயா அவர்கள் அதன் காரணம் கேட்டார். நான் சாண்டில்ய கோத்திரம் என்று சொன்னேன். எல்லா புகழும் ஒரிஜினல் சாண்டில்யனுக்கு போய் விடும், பெயரை மாற்றிக் கொள்ளேன் என்றார் அன்பொழுக. பிறகு நல்ல புகழோடு நீ வலம் வருவாய் என்று ஆசிர்வதித்தார். 


பின்னர் எனக்கு நல்லதொரு அணிந்துரை கொடுத்தார். பிறகு இந்த நூலை வெளியிட வேண்டும் என்ற அவா. மறுநாளே என்னை திரு ஜானகிராமன் ரொம்ப சஸ்பென்ஸ் கொண்டு ஒரு விழாவிற்கு கூட்டிச் சென்று என்னை ஒரு சிலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் தான் உரத்த சிந்தனை திரு உதயம் ராம் மற்றும் திரு ராஜசேகர். அன்று அவர்களின் ஆண்டு விழா, அதிலே பிரபல எழுத்தாளர் திருமதி பத்மாமணி அம்மையார் (என் சித்தப்பாவின் மாமியார்) ஜீவீ விருது பெற்றார்கள். நானும் ஒரு நாள் இந்த விருதினை பெறுவேன் என்று மனதில் பேராசை கொண்டேன். (அப்படியே எனக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு GV அவர்கள் கையாலேயே கிடைத்தது)


 'தலையுதிர்காலம்' எனும் அந்த கவிதை நூலை உரத்த சிந்தனை ஏற்பாட்டில் எழுத்தாளர் 'சுபா' மற்றும் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் கடற்கரையில் உள்ள எழிலகம் கிட்டிடத்தில் ஓரிரவில் கொட்டும் மழையில் 13 பேர் முன்னிலையில் வெளியிட்டனர்). அதன் பிறகு நான் சுமார் 1000 கவிதைகள் எழுதி இருந்தாலும் அடுத்த கவிதை புத்தகம் பதிப்பிக்கவில்லை. 

 

உரத்த சிந்தனை மூலம் அது நூற்றுக் கணக்கானவர்களுக்கு பின்னாளில் போய் சேர்ந்தது. கவிதை உறவு நடத்திய கவிதை இரவில் பங்கு பெற்று பல கவிதைகள் வாசித்தேன். பல பிரமுகர்களை சந்தித்தேன். அதே நிகழ்ச்சியை மாதம் தோறும் மூன்றாம் சனிக்கிழமை நடத்த ஏற்கனவே அமைப்பாளர்களாக இருந்த (மறைந்த) திரு அய்யாறு வாசுதேவன் மற்றும் தற்போது அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் இதயகீதம் ராமானுஜம் அவர்களுடன் என்னையும் ஓர் அமைப்பாளராக ஆக்கினார் ஐயா ஏர்வாடியார். அதே போல உரத்த சிந்தனை அமைப்பில் என்னை செயற்குழு உறுப்பினர் ஆக்கினார்கள். 

 


நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment