Wednesday, July 7, 2021

நீங்கா நினைவலைகள் - 13

 நீங்கா நினைவலைகள் - 13

- பாலசாண்டில்யன் 

கையில் டிகிரி வந்து விட்டது. ஓராண்டு எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்து விட்டது. நிச்சயம் இது இந்த புதிய வேலையில் உதவும் என்று நம்பினேன். சில நாட்கள் ராத்தி சார் அவர் அருகில் ஒரு டேபிளில் அமரச் செய்தார். பிறகு ஓரிரு மாதங்கள் கழித்து சோட்டுவிடம் பேசி என்னை முதல் மாடி ஆபீசுக்கு மாற்றச் சொன்னார். அங்கே சோமானி என்று ஓனரின் சொந்தக்காரர் தான் நாட்டாமை செய்தார். சோட்டு எனக்கு கேஷ் ஹாண்டில் செய்வது, வவுச்சர் போடுவது, அரசு அதிகாரிகள் இன்ஸ்பெக்ஷன் வந்தால் அவர்களோடு பேசுவது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தினார். சோட்டுவும் சோமானியும் சேர்ந்து கூட்டுக்களவாணிகளாக இருப்பதை என்னால் ஓரளவு உணர முடிந்தது. யாரிடம் சொல்ல?

அடுத்த சில நாட்களில் பெரியவர் வந்தார். என்னை அவர் காபினுக்கு கூப்பிட்டு கதவை மூடச் சொன்னார். "நாளை முதல் நீ கிராண்ட் ரோடில் இருக்கும் எனது வீட்டுக்கு வந்து விடு, நீ என்ன செய்ய வேண்டும் என்று ராத்தி சொல்லுவார்,நானும் சொல்லுவேன், யாரிடமும் இது பற்றி பேசாதே" என்றார். 

அடுத்த நாள் கிராண்ட் ரோட்டில் பிரமோத் சார் வீட்டை தேடிக் கண்டுபிடித்து போய் சேர்ந்தேன். அவர் எனக்கு மயங்கி விழும் அளவுக்கு ஆச்சரியமான வேலை கொடுத்தார். கடந்த மூன்று ஆண்டுகளின் 'பாலன்ஸ் ஷீட்' கொடுத்து அதில் இருந்து ப்ரோபிட் அண்ட் லாஸ், இன்கம் எக்ஸ்பெண்டிச்சர் தயாரிக்க வேண்டும். பின்னர் அவற்றைப் பார்த்து வவுச்சர் ரெடி செய்து, காஷ் புக், லெட்ஜர் எல்லாம் ரெடி செய்ய வேண்டும். எனக்கு நிறைய புதிய நோட்டுகள், பிளாங்க் கடை பில்கள், கலர் கலராக பேனாக்கள் என்று எல்லாமே வாங்கிக் கொடுத்தார். எனக்கு கொஞ்சம் தலை சுற்றியது. என் முகத்தை பார்த்த பெரியவர் 'என்ன பாலா பண்ணிடலாம் இல்ல... டவுட் இருந்தா பயப்படாதே, ராத்தி சார் இருக்கார். நாளை முதல் நீ 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை செய்தால் போதும். நீ சாப்பாடு கொண்டு வர வேண்டாம்' என்று சொல்லி நகர்ந்தார். சற்று நேரத்தில் அவர் வீட்டு மகராஜ் (சமையலறை மன்னர்) மசாலா டீ, முந்திரி பாதாம் பிஸ்கெட் எல்லாம் கொடுத்தார். உணவு இடைவேளையில் நெய் ரொட்டி மற்றும் பாஜி டால் எல்லாம் கொடுத்தார். தினம் தினம் ராஜ உபச்சாரம் தான். ராஜ்மா, டால் தடகன், கடாய் வெஜிடபிள், ஜீரா ரைஸ் என்று தினம் தினம் அசத்தினார். அப்பப்போ வந்து பாதாம் பால் வேண்டுமா ரோஸ் மில்க் வேண்டுமா என்பார். சில சமயம் நான் சரி என்பேன். பெரும்பாலும் எனது வேலையே எனக்கு டென்சன் ஆக இருக்கும். சாப்பாட்டு விஷயங்களில் மனம் லயிக்காது. 

ஒரு வாரம் கழித்து ராத்தி சார் வந்து இன்னும் சில டிப்ஸ் கொடுத்தார். நான் சாலரி ரிஜிஸ்டர் தயாரிக்க வேண்டும். வவுச்சரில் எனது கையெழுத்து சற்று வித விதமாக இருக்க வேண்டும். இடது கை கூடப் பயன் படுத்தலாம் என்றார். இதெல்லாம் நமக்கு பழக்கம் இல்லை. 'சரி' என்று மண்டை ஆட்டினேன். சுமார் ஐந்து மாதங்களில் மூன்று  ஆண்டுகளின் கணக்கு வழக்கு எல்லாமே (தலை கீழ் பாடமாக்கி விடவே) அவர்களுக்கு பிடித்த படி ரெடி செய்தேன். அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்துப் போனது. யாருக்கும் போன் செய்ய மாட்டேன். அங்கே இங்கே வீட்டில் நுழைய மாட்டேன். ஓரளவுக்கு அவர்கள் பேசும் மார்வாடி கூட புரிகிற மாதிரி இருந்தது. மஹாராஜுடன் பேசி பேசி ஹிந்தி கூட சற்று பேச வந்தது.

எனக்கு சம்பளம் தவிர மூவாயிரம் ரூபாய் மற்றும் ஒரு நல்ல சட்டை வாங்கிக் கொடுத்தார் பெரியவர். 'நாளை முதல் நீ பேக்டரி போகலாம்'. இங்கே நடந்தவற்றை யாரிடமும் சோட்டு கேட்டால் கூட சொல்லாதே என்றார். 

மறுநாள் எனக்கு புது டேபிள், புது சேர், தவிர எனக்குக் கிடைத்த மரியாதையே தனி. அங்கே ஒரு தமிழ் பேசும் சாந்தா அக்கா இருந்தார். அவர் பெரியவரின் ரகசிய உளவாளி போல. ரொம்ப பவர்ஃபுல். என்னுடன் அவர் தான் உட்கார்ந்து மதிய சாப்பாடு சாப்பிடுவார். அவர் சொன்னார், 'நீ ரொம்ப பிரமாதமாக வேலை செஞ்சேன்னு எம் டி சொன்னார், இங்கே சோமானிக்கு உன் மேலே ரொம்ப பொறாமை தான். நீ ஜாக்கிரைதையாக இரு'. வேற வேலை கிடைச்சா கூட கெளம்பிடு' என்றார். சோமானியும் சோட்டுவும் நிறைய போங்கு அடிக்கிறார்கள். உன் மேல போட்டாலும் போடுவார்கள். ஜாக்கிரதை என்றார். ஓராண்டு முடிந்தது இங்கே. 

நான் அதற்குள் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் மேனேஜ்மென்ட் - வாரக் கடைசிகளில் கிளாஸ் என்று சேர்ந்து இருந்தேன். ஒரு நாள் எங்களை கம்ப்யூட்டர் விசிட் என்று (வண்டலூர் ஜூ டூர்) போல கூட்டிக்கொண்டு போனார்கள். ஒரு பெரிய ஹால் முழுவதும் இருந்த ஐ பி எம் கம்ப்யூட்டர் ஒன்றை காண்பித்து நீங்கள் கற்றுக் கொண்ட ப்ரோக்ராமை இதில் தான் போட வேண்டும். நாங்கள் எல்லோரும் கண் பார்வை இல்லாதவர்கள்  யானையை சுற்றிப் பார்ப்பது போல சுற்றிப் பார்த்தோம். எனது ப்ரோக்ராமை எதில் போடுவது என்று கடைசி வரை பிடிபடவில்லை. அந்த டிப்ளமோ படிப்பிலும் பர்ஸ்ட் கிளாஸ் வித் டிஸ்டின்க்ஷன் கிடைத்தது. அதற்கு அடுத்த படி சிஸ்டம் அனாலிசிஸ் என்ற டிப்ளமோ படிப்பும் சேர்ந்தேன்.

எனது அத்தை பையன் நண்பன் மூலம் ஒர்லி எனும் இடத்தில் உள்ள தலால் குரூப் அப் கன்ஸ்ட்ரக்க்ஷன் நிறுவனத்தில் இன்டெர்வியூவுக்கு அழைத்தார்கள். சிபாரிசு என்பதாலும், முன் அனுபவம் இருந்ததாலும் என்னை அசிஸ்டென்ட் அக்கௌன்டன்ட் என்ற போஸ்டுக்கு எடுத்தார்கள். மிகப்பெரிய நிறுவனம். அவர்களுக்கு நூற்றுக்கணக்கில் டர்ன் கீ ப்ராஜெக்ட், தவிர ஹெட் ஆபிசில் 600 பேருக்கும் மேலாக வேலை பார்த்தனர். அருமையான ஒர்லி எனும் இடத்திற்கு பஸ்ஸில் போனாலே கடற்கரை என்று காட்சிகள் பிரமாதமாக இருக்கும். 

என்னை நேரடியாக சீப் அக்கௌன்டன்ட் பட் சாருக்கு கீழே போட்டார்கள். தினம் மாலையில் 'ஓ டி' வேற உண்டு. மாலை எல்லோருக்கும் நல்ல டிபன் வரும்.  அப்போது பாடகர் ஹரிஹரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த ராமதுரை எனும் உயர் அதிகாரி (சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் - என் பிரேமா அக்கா மாமனார் கூட அவருக்கு தெரிந்தவராக இருந்தார்.  மற்றும் அவர் நண்பர் மற்றொரு பாலா சார்(பெர்சோனல் மேனேஜர்)  இருவரும் காரில் வருவர். என் மீது அவர்களுக்கு கண்டதும் காதல். தினமும் அவர்கள் காரில் தான் நான் வீடு திரும்புவேன் கிங்ஸ் சர்க்கிள் வரை. வரும் வழியில் அவர்கள் பாட்டு பற்றி நிறைய பேசுவார்கள். சில நேரம் என்னை சிறு சிறு நாமாவளி பாடச் சொல்லுவார். ராமதுரை சார். பிறகு வேறு பஸ் பிடித்தோ நடந்தோ வீடு போவேன். இந்த தலால் நிறுவனத்தில் எனக்கு கிடைத்த அனுபவம் சொல்லில் வடிக்க முடியாது. 

ராமதுரை சார் என்னை 'டிப்ளமோ இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்' படிப்பில் சேரச் சொன்னார். நிச்சயம் உனக்கு வேறு நல்ல வேலை பார்த்துத் தருகிறேன். அதுவரை இங்கே நல்ல பேர் வாங்கு என்றார். அதிலும் சேர்ந்தேன். எனக்கு படிப்பில் ஒரு வெறி பற்றிக் கொண்டது.

இது வேற விஷயம். அத்தை வீட்டில் வெள்ளி தோறும் சித்ரஹார் ஹிந்தி பாடல் உண்டு. அதே போல ஞாயிறு தோறும் ஹிந்தி படம் உண்டு. வாரம் ஒரு முறை 'ஷப்தாஞ்சியா பலிக்கடலே' எனும் மராத்தி மெல்லிசையும், ஹிந்தியில் 'ஆரோஹி'' எனும் நிகழ்ச்சியும் விடாமல் பார்க்க ஆரம்பித்தேன். அதில் அப்போது சுரேஷ் வாட்கர். பினாஸ் மஜானி, ஹரிஹரன், அனூப் ஜலோடா, பங்கஜ் உதாஸ், அபிஜித் முகர்ஜி, ஜெகஜீத் சிங், சித்ரா சிங், பூபிந்தர், என்று பாடுபவர்கள் அப்படி மனதைக் கொள்ளை அடிப்பார்கள். சில வரிகளுக்கு சேகர் வீட்டில் இருந்தால் எனக்கு அர்த்தம் சொல்லித் தருவான். இந்த மாதிரி சங்கீதம் என்னுடைய வாழ்வின் ஒரு புதிய பகுதியானது. அதே போல சாஸ்திரிய சங்கீதம் கச்சேரிகளும் கேட்க தொடங்கினேன் (பண்டிட் பீம்சென் ஜோஷி, கிஷோரி அமோன்கர், அம்ஜத் அலி கான்,  ஹரிப்ரசாத் சவுராசியா (புல்லாங்குழல்)  பண்டிட் ஷிவ் குமார் ஷர்மா (சந்தூர் எனும் காஷ்மீரி வாத்தியம்),  இந்த பட்டியலில் அடங்கும்). இன்னும் இது பற்றி தனியாக குறைந்தது இரண்டு பாராக்கள் எழுதித் தான் ஆக வேண்டும்.

எனது இசை ஆர்வத்திற்கு அங்கே நிறைய தீனி கிடைத்தது என்றால் மிகையாகாது. 

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment