Saturday, July 24, 2021

நீங்கா நினைவலைகள் - 30

 நீங்கா நினைவலைகள் - 30

- பாலசாண்டில்யன் 

IILP (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் லெதர் ப்ரொடக்ட்ஸ்) நிறுவனத்தில் நான் நினைத்திருந்ததை விட நிறைய சவால்கள் காத்திருந்தது.

அங்கே காலணி, தோலாடைகள், தோல் பொருட்கள் (Leather footwear, Leather Garments, Leather Goods ) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. செர்டிபிகேட் படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பி ஜி டிப்ளமோ படிப்பு என்று வைத்திருந்தோம். நான் 1997 ல் அங்கே சேர்ந்தேன். 1992 ஆம் ஆண்டு தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் பதனிடுவோர் சங்கம் தொடங்கிய நிறுவனத்தில் நிறைய வங்கிகள் கார்பஸ் பண்டுக்கு நிதி அளித்திருந்தது. 

எல்லா பிரிவுகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இருந்தன. பயிற்றுவிக்கும் எல்லா பயிற்றுனர்களும் (UNDP funded NLDP program) மத்திய அரசின் திட்டப்படி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு சிறந்த பயிற்சி பெற்று இருந்தனர். அங்கே இருந்த சிலபஸ் (பாடத்திட்டம்) கூட CLRI ல் செயல்படுத்தப்படும் வெளிநாட்டு நிபுணர்கள் வழங்கிய ஒன்றாக இருந்தது. தொடக்கத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு நிபுணர் சென்னையில் தங்கி எங்கள் பயிற்றுனர்களுக்கு நேரடி பயிற்சி அளித்திருந்தனர். சாலமன் சார் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கே இருந்த பயிற்சி வசதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வந்து சிலவற்றை அமல்படுத்தி இருந்தார்.

இருந்தாலும் ஆண்டுக்கு இரு முறை அட்மிஷன் செய்து குறைந்தது 300 மாணவ மாணவிகள் படித்தால் மட்டுமே நிறுவனத்தை தொய்வின்றி நடத்த முடியும் என்பதை நான் ஆனுவல் ரிப்போர்ட் படித்து, பணி புரியும் மூத்த அதிகாரிகளிடம் பேசிப் புரிந்து கொண்டேன். நிறுவனத்தின் ப்ரொபைல் புதிதாக மாற்றி அமைத்தேன். வீடியோ எடுத்து ஒரு சிடி ரெடி செய்தேன். தவிர, ப்ரொஸ்பெக்டஸ் ரிடிசைன் செய்து நிறைய தோல் நிறுவனங்களுக்கு, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தேன். எங்கு சென்றாலும் என்னுடன் எங்கள் ரிஜிஸ்திரார் திரு சுகுமார் அவர்கள் என்னுடன் வந்து எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் சிஸ்டம் ஆனார். நாங்கள் ரெட்டையர் போல எங்கும் ஒன்றாகவே சென்றோம். 

ஒவ்வொரு முறை போர்டு மீட்டிங் நடக்கும் போதும் எங்களை சரியான கேள்விகள் கேட்டு, முடக்கி விட்டு மேலும் வேகமாக சரியாக ஆழமாக செயல்பட வைத்தார் சேர்மேன் மற்றும் இதர போர்ட் மெம்பர்கள். எனக்கு போர்ட் மீட்டிங் மினிட்ஸ் ரெடி செய்தல், ஆனுவல் ரிப்போர்ட் ரெடி செய்தல் இவற்றில் மிகவும் உதவியாக இருந்தது அங்கே தொடக்கம் முதல் அக்கௌன்டன்ட் ஆக பணி புரிந்த திரு அண்ணாதுரை அவர்கள். 

தவிர நான் இண்டோவில் இருந்து எனது செகரெட்டரி கோமதியை இங்கே பணி அமர்த்தினேன். பயிற்சி விஷயங்களில் மேனேஜ்மென்ட் விஷயங்கள் மாணவர்களுக்கு கொண்டு செல்ல எனது நண்பர்கள் (அனுபவசாலிகள், நிபுணர்கள்) எதிராஜன், டாக்டர் ஆறுமுகம், தென்காசி கணேசன், கிரிதரன், என் ஐ பி எம் சௌந்தரராஜன், என் எல் பி ரங்கநாதன், கிரிஷ்ணப்ரசாத், வசந்தகுமாரி, டாக்டர் ஸ்டக்கி தேவபாதம், சந்திரமோகன், என்று பலரை வரவழைத்தேன். அவர்கள் அனைவருமே நான் கொடுத்த ரூபாய் 500 (நம்ம பட்ஜெட் அவ்வளவே) பெற்றுக் கொண்டனர். ஆனால் என் நட்புக்காக, அங்கே படிக்கும் ஏழை மாணவர்களுக்காக வந்தனர்.

நிறுவனத்துக்கு  நிதி ஆதாரம் பெற சேர்மன் சாருக்கு மிக நல்ல முறையில் (பைல் திரும்பி வராதவாறு) நோட்ஸ் எழுதிட சாலமன் சார் ஏற்கனவே எழுதி அனுப்பிய காகிதங்கள் உதவின. அந்த விஷயத்தில் நான் எனது திறனை மேம்படுத்த வேண்டி இருந்தது. அவர் இப்படி எழுதுவதில் மிகப்பெரிய பேராசிரியர் போல செயல்பட்டு இருந்தார். மார்க்கெட்டிங் செய்ய பழைய நோட்டீஸ் முறை, போஸ்டர் முறை எல்லாமே பயன்படுத்தினோம். ஓரிரு முறை செய்தித்தாள் விளம்பரம் செய்யவே பட்ஜெட் உண்டு. இருந்தாலும் மாணவர்களை கொண்டு வந்து சேர்க்க முக்கினோம். முனகினோம். 

அருகே இருந்த பள்ளிகள், பாலிடெக்னிக், ஐ டி ஐ நிறுவனங்களுக்கு எங்களில் சிறப்பாக பேசி மாணவர்களைக் கவர ஒரு டீம் உருவாக்கினேன். மொத்தத்தில் நான் முதலீடு செய்யாத ஒரு தொழில் முனைவோர் போல செயல்பட வேண்டி இருந்தது. 'கமா கே லாவோ கமா கே ஜாவோ' - Bring money to take money - பணம் கொண்டு செல்ல பணம் கொண்டு வா என்பதே நிறுவனத்தின் தாரக மந்திரமாக இருந்தது. 

CLRI இயக்குனர் உயர்திரு டாக்டர் ராமசாமி அவர்கள் எங்கள் போர்டில் ஒரு இயக்குனர். ஒரு மீட்டிங்கில் எங்களுக்கு சாதகமாக ஒரு முடிவை அறிவித்து (என் வயிற்றில் பால் வார்த்தார்). அவருக்கு பெரிய மனசு. அதாவது அவர் இனி சான்றிதழ் கோர்ஸ் நடத்த மாட்டார்கள் அதனை நாங்களே செய்வோம். அவர்கள் ஒவ்வொரு முறை அட்மிஷனுக்கு தருகிற விளம்பரத்தில் எங்கள் நிறுவனம் பெயரையும் சேர்த்து (எந்த செலவும் இன்றி) தருவதால் எங்களுக்கு மாணவர் சேர்க்கை கூடும் என்று சொன்னார். அதன்படி ஒவ்வொரு முறையும் செய்தார். நான் அங்கே அப்போது அதிகாரிகளாக இருந்த திரு ராமகிருஷ்ணன் மற்றும் டாக்டர் சந்திரசேகர் (பின்னாளில் அவர் அங்கு இயக்குநராகி ஓய்வு பெற்றார்), திரு சாதிக், திரு தாஸ் ஆகியோரை சந்தித்து எங்கள் உறவை பலமாக்கினேன். பின்னாளில் அங்கே நடக்கும் நிறைய சிறப்பு வகுப்புகளுக்கு என்னை கௌரவ ஆசிரியராக அழைந்தனர். அதே போல CFTI, NIFT நிறுவனங்களும் என்னை அழைக்க ஆரம்பித்தனர். இப்போது தோல் பயிற்சி துறையில் பாலா IILP (இண்டோ பாலா மாறியது) சற்று தெரிய ஆரம்பித்தது. 

எங்கள் முக்கிய அதிகாரி திரு இஸ்மாயில் அவர்களின் மூத்த சகோதரி திருமதி குத்சியா காந்தி IAS மூலம் அப்போது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு செயலராக இருந்த திருமதி சிவகாமி IAS அவர்களை சந்தித்தோம். பிறகு எங்களுக்கு ஏகப்பட்ட அரசுத் திட்டங்களை (தாட்கோ நிறுவனம் மூலம்) செயல்படுத்தும் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அது பற்றி இன்னும் சொல்ல வேண்டி இருக்கிறது. 

இதற்கிடையில்  சென்னை பல்கலைக்கழகம் என்னை அழைத்து தமது M.Com பட்டமளிப்பு விழாவில் பட்டம் அளித்து சிறப்புரை ஆற்றும் கௌரவத்தை வழங்கியது. பிறகு SIPCOT நிறுவனத்தில் MD யாக இருந்த குத்சியா காந்தி IAS அவர்கள் மூலம் SC/ST வகுப்பை சார்ந்த பொறியாளர்களுக்கு தோல் துறையில் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கும் வாய்ப்பை வழங்கினார். 

அங்கு எனக்கு அறிமுகம் ஆன பொது மேலாளர் திரு மாரிச்சாமி (அன்று முதல் எனது வாழ்வின் முக்கிய அங்கத்தினர் ஆனார் என்பது இங்கே சொல்ல வேண்டிய வரலாறு) மூலம் பல்வேறு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. 

நான் சும்மா இருக்காமல் MS எடுகேஷன் மேனேஜ்மென்ட் (முதுகலை இரண்டாண்டு - தொலைதூர கல்வி திட்டம் மூலம்) சேர்ந்தேன். ஏற்கனவே சேர்ந்த எம் எஸ் சைக்கோதெரபி மற்றும் கௌன்செலிங் படிப்பை மிகச் சிறந்த முறையில் முடித்து இருந்தேன்.  தவிர, நான் பயிற்சி துறையில் நுழையும் சம்பவங்கள் தொடங்கின. அது தான் எனது புதிய சகாப்தத்தின் தொடக்கம். 


நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment