Sunday, July 4, 2021

நீங்கா நினைவலைகள் - 10

 நீங்கா நினைவலைகள் - 10

- பாலசாண்டில்யன் 

என்னுடைய சித்தப்பா மறைந்த கிருஷ்ண
மூர்த்தி, இப்போது இருக்கும் எனது ஒன்று விட்ட சித்தப்பா கனடா சேகர்,  மற்றும் இன்னும் சில உறவினர்கள்  என்று எல்லோரும் படித்த ராசியான கல்லூரி தான் மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் காலேஜ். அங்கிருந்து தான் அட்மிஷன் கார்ட் வந்தது. அப்பாவால் வர முடியவில்லை. ஆபீஸ் வேலை. நீ தனியாகப் போய் அட்மிஷன் வாங்கு. எப்போ தான் கத்துக்கப்போறே என்று பீஸ் கொடுத்து அனுப்பினார். பயந்து பயந்து போனேன். 

அப்ளிகேஷனில் அப்பா அல்லது கார்டியன் கையெழுத்து போட வேண்டும். மறுநாள் வர முடியாது. இன்றே பணம் கட்ட வேண்டும் என்றார் அட்மின் ஆபீஸில் ஒரு சிடு சிடு. (பின்னாளில் தான் தெரியும் அவர் என் அப்பாவின் பஜனை நண்பர் என்று, இன்னொருவர் மேற்கு மாம்பலத்தில் சுரேந்திரா துணிக்கடை நடத்தும் ஓனரின் மகன் ) கிடைத்த சீட்டு 'பி ஏ எகனாமிக்ஸ்'. பி காம் சீட்டு இல்லை என்றனர். (அப்போதும் சரி இப்போதும் சரி இந்த பி காமுக்கு அப்படி ஒரு டிமாண்ட் ) கெஞ்சிப் பார்த்தேன். 65% மேல் மார்க் எடுத்தவர்களுக்குத் தான் என்றனர். அடுத்த சாய்ஸ் பி ஏ கார்பொரேட் செக்ரட்டரிஷிப். 

கையில் மொபைல் போன் எல்லாம் அப்போது கிடையாது. யாரிடம் போய் யோசனை கேட்பது? எதேச்சையாக நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டு அங்கிள் பத்மநாபன் அவர் பையன் முரளியை பி யு சி யில் சேர்க்க வந்திருந்தார். (பின்னாளில் அவன் டி வி எஸ் நிறுவனத்தில் ஜி எம் ஆனான்). அவரிடம் யோசனை கேட்டு கார்டியன் சைன் அவரையே போட வைத்தேன். அப்பா!  டிகிரி சேர்ந்தாகி விட்டது. இதற்கு பிறகு சி ஏ படித்து ஆடிட்டர் ஆக முடியுமா ? எனக்கு தெளிவு சொல்ல யார் இருந்தார்?

முதல் நாள் பர்ஸ்ட்  கிளாஸ் பாஸ் வைத்துக் கொண்டு மின்சார ரயிலில் கல்லூரி போய் சேர்ந்தேன். ஒரு குரூப் பசங்க என்னை கூப்பிட்டார்கள். "என்னப்பா என்ன கோர்ஸ்? பாத்தா எட்டாம் கிளாஸ் போல இருக்கே,,,யார் உனக்கு அட்மிஷன் கொடுத்தார்கள் ....பாடத் தெரியுமா?" செம கலாய்....! நான் "தெரியும்". என்ன பாட்டு உனக்கு பிடிக்கும் என்று கேட்ட போது யோசிக்காமல் "ஆயிரம் நிலவே வா" என்றேன். அந்த கும்பலில் ஒருவன் "இங்க பாரு, இந்த பாட்டை பாடு, ஆனா நான் சொல்லுற மாதிரி, ஆயிரம் நிலவே வா, தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது நிலவே வா ...இப்படி நான் நிறுத்த சொல்லுற வரைக்கும் பாடணும், புரிந்ததா ? என்ன முழிக்கிற, பாடு" என்று கொக்கரித்தான். நானும் என் கச்சேரியை ஆரம்பித்தேன். சுமார் நூறு நம்பர் இறங்கி விட்டேன். போதும் என்று சொல்லவில்லை. 

அவர்கள் வேறு யாரை பிடிக்கலாம் என்று யோசிப்பதை கவனித்து நான் பாடுவதை நிறுத்தினேன். "ஏய் இன்ன நிறுத்திட்டே, பாக்கெட்ல எவ்வளவு காசு இருக்கு" என்றான் ஒருவன். நான் திரு திரு என்று முழித்து கையை விட்டு ரெண்டு ரூபாயை காட்டினேன். "போய் நாலு டீ வாங்கிட்டு வா" என்றான். "சார் வீட்டுக்கு போக காசு வேண்டும் சார், ப்ளீஸ் விட்டுடுங்க" என்று கெஞ்சினேன். என்னை விட நல்ல பார்ட்டி சிக்கவே சரி திரும்பிப் பார்க்காம ஓடு என்றார்கள். வேறு குரூப்பில் பாண்டை கழட்டச் சொன்னார்கள், முடியாது என்றவனை கிரௌண்டை அஞ்சு ரவுண்டு வரச் சொன்னார்கள். இவர்கள் நல்லவர்கள்
என்று நினைத்து நகர்ந்தேன். 

என்னுடைய கிளாஸ் எங்கே என்று விசாரித்து வகுப்பை நோக்கி ஓடினேன். மிகப்பெரிய கல்லூரி. சுமார் 3000 பேர் படித்தனர் என்று நினைவு. தவிர, மாலைக் கல்லூரியும் உண்டு. மாணவர் தங்க ஹாஸ்டல் உண்டு. மிகப்பெரிய கிரிக்கெட் கிரௌண்ட். பல மேட்ச்கள் இங்கே நடக்கும். ( பின்னாளில் எனது வகுப்புத் தோழன் ஆழ்வார்பேட்டை டீமின் ஓப்பனிங் பாட்ஸ்மேன்.)
எனக்கு தமிழ் வகுப்பு எடுத்தவர் மறைந்த தமிழறிஞர் புலவர் வேணுகோபால் (பின்னாளில் தான் தெரியும் அவர் தான் நாகநந்தி என்றும் அவர் தான் ஆர் எஸ் மனோகர் அவர்களின் நாடகங்களுக்கு வசனம் எழுதுபவர் என்றும் - வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி, பாரதி போன்ற முறுக்கு மீசை என்று கம்பீரமாக இருப்பார்)  மிகவும் பிரமாதமாக இருக்கும் அவரது வகுப்புகள். அதே போல எகனாமிக்ஸ் வகுப்புகள் எடுக்க பேராசிரியர்கள் கணபதி (அவர் தான் துறைத் தலைவர்), பாலசுப்ரமணியன் (பின்னாளில் தான் தெரியும் அவர் சாய் சங்கரா மாட்ரிமொனி பஞ்சாபகேசன் அவர்களின் மூத்த சகோதரர் என்று - அவர் நூல்கள் மூன்றுக்கு நான் அணிந்துரை வழங்கினேன், அவர் மிகவும் பெருமைப்பட்டார் என்பது வரலாற்றுப் பதிவு), நாராயணன், ஸ்ரீனிவாசன் (இன்றும் அவர் அங்கே இயக்குனராக இருக்கிறார் என்று அறிகிறேன்), நிச்சயம் எல்லோருமே மாபெரும் அறிவாளிகள். 

நான் முதல் பெஞ்சில் உட்கார்ந்து வாத்தியார் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நோட்ஸ் ஆக எழுதிக் கொள்ளுவேன். புத்தகம் வாங்கிட முடியாது. தேவை என்றால் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்துப் படிக்கலாம். ஆனால் அங்கெல்லாம் போனது கிடையாது. பிறகொரு நாள் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி கார்ட் வாங்கினேன்.

இரண்டாம் ஆண்டில் தான் சூடு பிடித்தது. எனது வகுப்பில் படித்த 85% பேர் NCC, NSS, Economic Forum, காலேஜின் கிரிக்கெட் டீம் உறுப்பினர், ஹாக்கி விளையாட்டு உறுப்பினர் என்று வகுப்பில் இருந்த 50 பேரில் பலர் பிசி. நான் எனது பங்குக்கு முதல் ஆண்டில் இருந்தே டி பி ஜெயின் கல்லூரியில் பாடிய அதே "வெள்ளைத்தாமரை பூவில் இருப்பாள்" பாடல் பாடிட தேர்வு ஆனேன். சமஸ்க்ரிதம் பேராசிரியர் திரு ராமதாஸ் அவர்கள் என்னை தேர்வு செய்தார். தவிர, என்னை அநேகம் அகில இந்திய வானொலி நிலையத்தில் பாடிடும் வாய்ப்பும் பெற்றுத் தந்தார்.

வழக்கம் போல நான் மக்கள் வகுப்பில் தான் ரயில் பயணம் செய்தேன். அதில் தான் எனது நண்பர்கள் குழாம் இருக்கும். அதுவும் கதவுக்கு பக்கத்தில் திரைப்படங்களில் வருவது போல கம்பியைப் பிடித்துக் கொண்டு தான் பயணம். எனது அப்பாவுக்கு அப்போது தாம்பரத்தில் ஆபீஸ் மாறி இருந்தது. எனக்குத் தெரியாமல் நான் கம்பி பிடித்துக் கொண்டு நின்று பயணிப்பதை பார்த்திருப்பார் போல. ஒரு நாள் அம்மாவிடம் எனது காது பட சொன்னார், "முதல் வகுப்பு பாஸ் வாங்கிக் கொடுத்தாலும் உன் பிள்ளை குரங்கு மாதிரி கம்பியைப் பிடித்துக் கொண்டு தான் போகிறான்". அம்மா என்னிடம் அதைச் சொல்லி முணுமுணுத்தார். நானும் "எனது நண்பர்களோடு பயணம் செய்தால் தான் நன்றாக இருக்கும், ஏம்மா புரிஞ்சுக்க மாட்டேன்கிறே ?" என்று எனது பதிலை அம்மா மூலம் அப்பாவிற்கு தூது அனுப்பினேன்.

அப்போது கமல் சாரின் "இளமை ஊஞ்சலாடுகிறது" படம் ரிலீஸ் ஆன சமயம் என்பதால் மாம்பலம் ஜூப்லி ரோடு அருகே இருந்த 'கங்கா டைலர்ஸ்' க்கு போய் பெல்பாட்டம் தைத்துக் கொண்டேன். அதற்கும் அப்பாவிடம் சரியான திட்டு தான். "உன் பையன் கிட்டத்தட்ட ரௌடி ஆயிட்டான்...ஸ்டெப் கட்டிங், பெல்பாட்டம் என்று ஒவ்வொன்றாக வந்து விட்டது." என்று குற்றப்பத்திரிகை வாசித்தார். அவருக்குத் தெரியாது நான் சில நேரம் மதிய வகுப்புகள் இல்லை எனும் போது சில நண்பர்களோடு நிறைய கமல் படங்கள் (சட்டம் என் கையில், நிழல் நிஜமாகிறது, மரோசரித்ரா) பல்லாவரம் சென்று பார்த்த விஷயம். தெரிந்திருந்தால் கொலையே செய்து இருப்பார். 

அடிக்கடி என்னை பல அனைத்துக் கல்லூரி கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்க என்னை அழைத்துப் போக வருவார் கவிஞர் ராஜசிம்மன் (இப்போதும் அவரை நினைப்பேன் - எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை) வருவார். அவரைப் பார்த்தாலே அப்பா அம்மாவிடம் சொல்லுவார், "இதோ கவிஞரை கூப்பிட்டுக் கொண்டு போக ஆள் வந்தாச்சு."

என்னுடைய பெரியம்மா பையன் நாகு அண்ணா எங்கள் வீட்டுக்கு (1978-79 களில்)  அடிக்கடி வருவார். அவருக்கு ஹிந்தி படம் மிகவும் பிடிக்கும். எனக்கு காலேஜ் மதியம் வரை தான். இரண்டு மணிக்கு மேல் நான் ப்ரீ தான். அவருக்கு ஒரு கம்பெனி தேவை. "சித்தி நான் இவனை கூட்டிண்டு போய் நானே கொண்டு வந்து விடறேன் " என்று பர்மிஷனும் வாங்கி விடுவார். சபைர் தியேட்டருக்கு தான் போவோம். 'ஆராதனா, தரிந்தா, டான், முக்கத்தர் கா சிக்கந்தர், திரிஷூல்  (இன்னும் இருக்கு - முழுமையாக நினைவில் இல்லை  - அவரே பக்கத்தில் இருந்து கதையும் சொல்லுவார்) என்று பார்த்தோம். இண்டெர்வெல் சமயம் சமோசா என்று நொறுக்குத் தீனியும் உண்டு. 

இரண்டாம் வருடம் படிக்கும் போது சென்னை கோபாலபுரத்தில் பாரதியார் சங்கம் நடத்திய பாட்டுப்போட்டி. என்னுடைய அம்மா "நெஞ்சுக்கு நீதி" பாட்டை காவடி சிந்து மெட்டில் எனக்கு ராக மாலிகாவாக சொல்லிக் கொடுத்தார். துணிச்சலுடன் போய் பாடினேன். முதல் பரிசு டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுக்கு கிடைத்தது. அவர் "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி" பாடினார். நான் இரண்டாவது பரிசு பெற்றேன். சான்றிதழ் மற்றும் பெரிய திருக்குறள் புத்தகம். பெண்கள் பிரிவில் இசையரசி சுதா வெங்கட்ராமன் (சுதா ரகுநாதன்) பரிசு பெற்றார். 
இந்த போட்டிக்கு செல்லுவது என்பது ஒரு வெறி போல ஆனது. பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி என்று போன போது ஏ எம் ஜெயின் கல்லூரிக்கு சுமார் 50 சூழல் கோப்பைகள் நான், ஸ்ரீனிவாசன், ராஜசிம்மன் போன்றோர் இணைந்து பெற்று வந்தோம். அப்போது போட்டிக்கு வந்தவர்கள் டாக்டர் சுதா சேஷன், அட்வகேட் ராமலிங்கம், மணிமொழி, வேறு ஒரு சுதா என்று எல்லோருமே தீப்பொறி பறக்க பேசக்கூடியவர்கள். கவிதை போட்டியில் ராசி அழகப்பன் போன்றோர் வருவர். நான் நிறைய நேரம் ஆறுதல் பரிசு வாங்குவேன். மூன்றாவது பரிசும் உண்டு. ஓரிரு கவிதைப் போட்டிக்கு கவியரசு வைரமுத்து அவர்கள் கூட நடுவராக இருந்தது உண்டு. அது நிச்சயம் மறக்கவொண்ணா பொற்காலம்.

இப்போது அப்படி இப்படி பைனல் இயர் வந்தாகி விட்டது. நல்லபடி எல்லா பேப்பரிலும் பாஸ் ஆகி விட்டேன். எனக்கு முழுவதும் உதவி செய்வது கே டி ஜெகநாதன் (ஹிந்து பத்திரிகையில் மிகப் பெரிய பதவியில் இருந்து ஓய்வு), வி டி கிரிதர் (ஆனந்த விகடன், ரீடர்ஸ் டிஜெஸ்ட்,,ஹிந்து போன்ற பத்திரிகைகளில் பெரிய பதவி, இப்போது போத்தீஸ் நிறுவனத்தின் ஆலோசகர்), லக்ஷ்மன் (டி சி எஸ் நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்து ஓய்வு) என்று இவர்கள் இல்லை என்றால் நான் பாஸ் ஆகி இருக்க மாட்டேன். சுமார் மார்க்கும் வாங்கி இருக்க மாட்டேன். நாங்கள் எல்லோருமே இன்றும் அடிக்கடி மீட் செய்வது உண்டு. தவிர இன்றும் ஒரு தனி வாட்சாப் குழுவில் இருக்கிறோம்.
பைனல் இயரில் நடந்த சில மறக்க முடியாத விஷயங்கள் உண்டு. அவை எல்லாம் நினைவுப் பொக்கிஷங்கள்.

முடியவில்லை ஜெயின் கல்லூரி புராணம் .

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்.

No comments:

Post a Comment