Monday, July 19, 2021

நீங்கா நினைவலைகள் - 25

 நீங்கா நினைவலைகள் - 25

- பாலசாண்டில்யன் 

நான் 'ஜெமினி' (ஜூன் மாதம் பிறந்ததால்) இயல்பாகவே நான்  ரொமான்டிக் எஸ் பி பி சார் சொல்லுவது போல). அந்த ஜோகேஸ்வரி கம்பெனியில் "'எனக்கு சீக்கிரம் திருமணம் ஆகி விட்டது, நீ என்னை வயதில் வேறு சின்னவன்'" என்று ஓரிரு முறை சொல்லி இருப்பாள் வர்ஷா பட். இப்படி சீண்டிப் பார்த்த அழகான பெண்கள் நிச்சயம் உண்டு. நான் காதலை கவிதை மூலம் கொண்டாடியது போல உண்மையில் காதலை வாழ்க்கையில் கொண்டாடவில்லை. காரணம், திருமணத்திற்கு தங்கை இருக்கிறாள் அல்லது நான் திருமணம் செய்து கொள்ள மனதளவில் தயாராகவில்லை என்பதுவே. 


பிறகு வேலை பார்க்கும் சமயத்தில் நான் மேலதிகாரியாக இருந்ததால் நிறுவனத்தில் காதலுக்கு அனுமதி இல்லை. (குறிப்பாக ஏற்றுமதி நிறுவனங்களில் ஒரு சாபக்கேடு உண்டு. ஆண் பெண் மிக நெருக்கமாக பல மணி நேரம் ஒன்றாக வேலை பார்க்கும் இடத்தில் பாலின சீண்டல்கள், உண்மை மற்றும் போலிக் காதல்கள், தவிர இல்லறம் தாண்டிய தகாத உறவுகள் என்று இருக்கும் நிலையில் அவற்றைக் கட்டுக்குள் வைத்து நமது நிறுவன வேலைகளை செய்து வாங்குகிற ஒருவன் எப்படிக் காதல் செய்ய முடியும்?) நானே சில பல காதல்களை வெட்டி விட்டு, அவரில் ஒருவரை வேலையை விட்டுத் தூக்கி இப்படி எல்லாம் செய்து இருக்கிறேன். நான் காதலுக்கு எதிரி அல்ல, காதலிப்பதற்கு எதிரி என்றானேன். உடன் வேலை பார்த்தவர்கள் சிலர் ஜாடைமாடையாக என்னிடம் காதல் சொல்லும் போது 'நோ' என்று அழுத்தமாக சொல்லி விட்டு வேலையைப் பார்ப்பேன். ஓரிரு பெண்களைப் பார்த்து அப்படி கற்பனை செய்து விட்டு அதனை நானே கருவில் கத்தரிப்பேன். வேறு வழியில்லை.  


காதல் கத்திரிக்காய் எல்லாம் என் அப்பாவிற்கும் பிடிக்காது. அதெல்லாம் மனசுக்கு புரியுமா? பிறகொரு நாள் எனக்கு ஒரு காதல் உண்டாயிற்று. 'அவளோடு' தினம் ஊர் சுற்றுவது என்றெல்லாம் இல்லை. இருந்தாலும் அவளை எனது வண்டியில் சில நேரம் கொண்டு போய் போகிற வழியில் அவள் ஆபீஸ் விடுவேன். ஓரிரு சமயம் மாலை நேர காபி. அவ்வளவே. பிறகு என் வீட்டில் சொல்லி, என் சித்தப்பாவை தூது அனுப்பினால், அரசாங்க வேலையில் இருந்தால் தான் பெண் கொடுப்போம் என்று அனுப்பி அவர்களே 'பிரேக் அப்' செய்து விட்டார்கள். (பிறிதொரு நாளில் அவள் திருமணத்திற்கு என் மனைவியோடு சென்று மனதார வாழ்த்தி விட்டு வந்தேன் (வங்கியில் வேலை பார்க்கும் ஒரு சொங்கியை திருமணம் செய்து கொண்டாள் அவள் - போகட்டும் எனக்கென்ன?)


பின்னர் இன்னொரு அழகான பெண் எங்கள் ஏரியா தான். எங்கள்  பஜனை நிகழ்ச்சிகளுக்கு வருவாள். இவள் 'ஓகே' என்று நானே நினைத்துக் கொண்டேன். ஒன் சைட் தான். எங்கள் குடும்ப நண்பர் போனார் எனக்கு திருமணம் பேச. 'வயது வித்தியாசம்' என்று அதுவும் கட் ஆனது. சரி, இனி இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் நமக்கு சரிவராது என்று நானே முடிவுக்கு வந்தேன். பிறகு எதிரில் யார் வந்தாலும் பார்ப்பதை நிறுத்திக் கொண்டேன்.


இப்போ என்ன அவசரம், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இன்னும் செட்டில் ஆகலை என்று சொல்லி நானாகவே தள்ளிப் போட்ட நாட்கள் தாண்டியது. அடடா இன்னும் வயதாகிக் கொண்டே போகிறேதே, எவ்வளவு நாள் தான் பொறுத்திருப்பது, பயம் பற்றிக் கொண்டது. வயது 31 ஐத் தாண்டி விட்டது. தனியார் வேலை. பெரிய சம்பளம் கூட இல்லை. இருந்தாலும், எப்போ சாப்பாடு போடப்போறே என்கிற பல பேரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம். என்ன செய்வது? எனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமா என்று கூட தோன்ற ஆரம்பித்தது. 

 

எனவே வீட்டில் ஜரூராக கும்பகோணத்தில் பார்த்தார்கள், மாயவரத்தில் பார்த்தார்கள், பிலாயில் இருந்து கூடப் பார்த்தார்கள். பெண் பார்க்கும் படலம் நடந்தது. அவளுக்கு என்னை எனக்கு அவளைப் பிடித்தது. தனியாக ஒரு சில நிமிடங்கள் பேசினோம். மறுநாளுக்கு மறுநாள் நிச்சயதார்த்தம் என்று முடிவாகி என் அம்மா வீட்டில் பாயசம் கூட வைத்தார். நானும் அப்போது ஹெட் ஆபீஸில் சில முக்கிய நண்பர்களுக்கும் எனது எம் டி சாருக்கும் சொன்னேன். அந்தப் பெண்ணின் வயதான அத்தை மண்டையைப் போட்டார். மறுநாள் பெண்ணின் அப்பா வீட்டுக்கு வந்து எங்களுக்கு அபசகுனமாக உள்ளது. இந்த கல்யாணம் கான்செல் என்று சொல்லி விட்டு கூலாக கிளம்பினார். அந்த ஏமாற்றத்தை எப்படி சமாளித்தேன் என்று இன்றும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. பெரிய மூக்கடைப்பு தான் அலுவலகத்தில். "சார் உங்களை போய் ரிஜெக்ட் செய்தார்களா?" என்று பாவம் பார்த்த என் சக ஊழியர்களை நன்றியோடு பார்த்தேன். 


நட்சத்திரம், கோத்திரம், குண்டு, ஒல்லி, படிப்பு, நிறம், வயது, ஜாதகம், பாலக்காடு, திருநெல்வேலி  என்று சேர்க்கப் பார்த்ததை விட தள்ளப் பார்த்தது தான் அதிகம். எல்லாம் எனது பெரியப்பா அவர்களின் கைவண்ணம். அவர் தான் எங்கள் வீட்டு ஆஸ்தான ஜோதிடர். அவர் சொல்லே மந்திரம். அவர் எவ்வளவு ஜாதகங்கள் ரிஜெக்ட் செய்து இருப்பார் என்று அவர் மட்டுமே அறிவார். 

 

அப்போது தான் நான் வசித்து வந்த காலனியின் பக்கத்துத் தெருவில் இருந்தே ஒரு ஜாதகம் வந்துள்ளது என்று அம்மா சொன்னார்கள். இப்போது பெரியப்பாவின் நேரம். முதலில் எனது கசின் ஒருவனுக்குத் தான் இந்த ஜாதகம் பொருந்தும் என்று சொன்ன பெரியப்பா இரண்டொரு நாட்கள் கழித்து பல்டி அடித்தார். இந்த ஜாதகம் எனக்குத் தான் பொருந்தியுள்ளதாக ஒரே போடு போட்டார். முதல் கட்டமாக எனது அம்மாவும் பெரியம்மாவும் போய் பார்த்து விட்டு போட்டோ வாங்கி வந்தார்கள். 


அப்போது நான் ஹெட் ஆபீஸில் ப்ரோமோஷன் ஆகி இருந்ததால், தினமும் வீடு வந்து சேர மிகவும் தாமதம் ஆகும். வந்தவுடன் எனது மூட் பார்த்து சாப்பாட்டிற்கு பிறகு ஒரு போட்டோவை எனது அம்மா காட்டினார். ரொம்ப ஒல்லி, நல்ல கலர்,  நல்ல லட்சணம், இருந்தாலும், அரைகுறையாக சரி என்று சொல்லி விட்டுத் தூங்கச் சென்றேன். ('எனக்காக பொறந்தாயே எனதழகி' என்று இன்று பாடி இருப்பேன். அன்று மனதில் அப்படி வந்த பாட்டு - இன்னாருக்கு இன்னார் என்று)

 

அடுத்த நான்கு நாட்களில் பெண் பார்க்கும் படலம் என்று அறிவிப்பு வெளியாகிட, பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் வேண்டாம், காபி மட்டும் போதும் என்று  கண்டிஷன் போட்டுவிட்டு பெண் பார்க்க சென்றேன். பெண் பார்க்கும் நேரம் பார்த்து அந்த ஒரு சில நிமிடங்களில் பெரியப்பா ஆடி ஆடிப் பேசி அவள் முகத்தை சரியாக பார்க்க முடியாமல் செய்தார். எல்லோருக்கும் பிடித்துள்ளது என்று சொல்ல நானும் சரி என்று சொல்லி விட்டேன். அவள் பெயர் சுகீர்த்தி. சில பல முறை சொல்லிப் பார்த்தேன். மீண்டும் ஒரு முறை ஆவல் மேலோங்க போட்டோவை எடுத்துக் பார்த்தேன். எடுத்து நினைவாக ஆபிஸ் பையில் வைத்துக் கொண்டேன். அங்கே எனது நெருங்கிய சகாக்கள் இருவரிடம் காட்டிய போது, நல்ல பொருத்தம் என்றார்கள் ' கோ அஹெட்' என்றனர். 

 

மே 15, 1992 அன்று திருமணம் என்று நாள் குறிக்க முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. ராதா கல்யாணம், பஜனை எல்லாம் வைத்து தடபுடலாக எல்லாம் நல்லபடி முடிந்தது. திருமணத்திற்கு முன்பு சில பல கண்டிஷன்கள் போட்டேன், நோ வரதட்சணை, நோ சங்கிலி, கோட்டு சூட்டு காசி யாத்திரை செருப்பு தடி கூட நான் தான் வாங்குவேன் என்று. பார்க்க சற்று கோபக்காரராக தெரிந்த எனது மாமனார் அரைமனதாக ஓகே சொன்னார். திருமணத்திற்கு முன்பு இரண்டு முறை மட்டும் 'அவளை' பார்த்தேன். ஒன்று நான் அலுவலக வேலை காரணமாக வெளிநாடு செல்லும் முதல் நாள், சில நிமிடங்கள், அன்று உண்மையிலேயே மிக அருகில் சரியாகப் பார்த்தேன். கன்னத்து குழியுடன் அவளின் அந்த வசீகரப் புன்னகை எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்த முறை எனது கல்யாண கோட்டு சூட்டு ஷூ வாங்கிட 'அவளை' அவளின் பெற்றோர் அழைத்து வந்தனர். எனது டூவீலரில் ஏற்றி மவுண்ட் ரோடில் போனேன். அதற்கு முன்பு உட்லாண்ட்ஸ் டிபின் ரூம் (பனகல் பார்க் அருகே) சென்று ஆப்பிள் பஜ்ஜி, வாழைப்பழ மில்க் க்ஷேக் வாங்கிக் கொடுத்தேன். பிடித்ததா என்று கூட கேட்கவில்லை. 

 

சொன்ன தேதியில் திருமணம் வெகு சிறப்பாக  நடந்தது. பணமா பாசமா என்று ஒரு பட்டிமன்றம் வேறு. பாலரமணி சார், ஏர்வாடி சார், உதயம் ராம் சார், இதயகீதம் சார், பிரபாகரபாபு சார் எல்லோரும் பட்டிமன்றத்தில் பேசினார்கள். NKT முத்து சார், கீழாம்பூர் சார், பாரதி காவலர் சார் என்று திருமண வரவேற்பில் மிக அதிக விஐபி கூட்டம். அன்று இரவே மண்டபத்தை காலி செய்யும் அளவிற்கு ஓர் அசம்பாவிதம். எனது மாமா திருமண நாள் அன்றே இறந்து போனார். அதனால் பெரிய கொண்டாட்டம் வீட்டில் இல்லை. முதல் இரவு, ஹனிமூன் எல்லாமே ஒரு வாரம் தள்ளிப் போனது. 

 

வீடு மிகச் சிறியது. சாமான்கள் அதிகம். மனிதர்களும் அதிகம். கூட்டுக்குடும்பம் வேறு. எல்லாமே அட்ஜஸ்ட் செய்து கொண்டு மாறாத புன்னகையுடன், பயத்துடன், தயக்கத்துடன் வலம் வந்தாள் எனது மனைவி சுகீர்த்தி.

 

ஒரு பட்டாளமாக எட்டு பத்து டிக்கெட் வாங்கி நாடோடி தென்றல், சிங்கார வேலன் இரண்டு படங்களும் அடுத்த அடுத்த வாரங்களில் பார்த்தோம். தனியாகப் போகவில்லை என்று அவள் எந்தக் குறையும் சொல்லவில்லை. நான் உண்டு என் ஆபீஸ் உண்டு என்று இருந்தேன். அவள் மட்டும் எனது வீட்டுக் கூட்டத்தில் சிக்கித் தவித்தாள். நடுவில் ஒரு முறை நானே போன் செய்தால் உண்டு. இரவு லேட்டாக வருவேன். அது வரை சாப்பிடாமல் காத்திருப்பாள். எனக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம். அவளை பெரிதாக பார்க், பீச், கோவில், ஷாப்பிங் என்று கூட்டிப் போகவில்லை. அதற்குள் எனது மூத்த மகள் அவள் வயிற்றில். டெலிவரிக்கு நான் அவளை தாய்வீட்டிற்கு (சென்னை அம்பத்தூருக்கு அவள் வீடு மாறி விட்டது அப்போது) அனுப்பி வைக்கவில்லை. 

 

அவள் எனது மனைவியானவுடன் தான் எனது இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கை, பெரியப்பா மகன், சித்தப்பா மகன் மற்றும் மகள் எல்லோரின் திருமணம் நடந்தது. ஒவ்வொன்றிலும் அவளின் பங்கு மிகவும் மகத்தானது. அவளின் திட்டமிடுதல், கட்டு செட்டாக பொருள் வாங்குதல், பெரியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுதல், வீட்டிற்கு வரும் மிகப் பெரிய விருந்தினர் கூட்டத்தை சமாளித்தல், எனது சற்று முன் கோபக்கார அப்பாவை கவனித்துக் கொள்ளுதல், அப்பாவின் அம்மா (படுத்த படுக்கையாக இருந்த எனது பாட்டி -வயது 86) அவர்களை கவனித்துக் கொள்ளுதல், இதற்கு இடையில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு என்று 5 வருடங்கள் வெற்றிகரமாக படித்து முடித்தாள். இரண்டாவது மகளும் வந்தாள்.  எனது அம்மாசித்திபெரியம்மாஅத்தைதங்கைகள்தம்பிகள் எல்லோரையும் அட்ஜஸ்ட் செய்து ரொம்ப அனுசரணையாக நடந்து கொண்டாள்.

 

வம்பு பேச மாட்டாள். கோபப்பட மாட்டாள். பொறாமைப்பட மாட்டாள். எந்த ஒரு பண்டிகையின் முறைகளையும் விட்டு விட மாட்டாள். தேவையற்ற செலவு செய்ய மாட்டாள். நானே அதிக விலையில் புடவை அல்லது பரிசு வாங்கிக் கொடுத்து விட்டு அவளின் அன்புக் கோபத்திற்கு ஆளாவேன். பார்த்ததை எல்லாம் கேட்க மாட்டாள். பார்த்து பார்த்துத் தான் வீட்டிற்கு வாங்குவாள். குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைக்க மாட்டாள். எனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவள் ஆடிப் போய் விடுவாள். என்னை மிகுந்த அக்கறையுடன் கவனிப்பாள். எனது நண்பர்களின் பெயர், அவர்களின் பிறந்த நாள், திருமண நாள் எல்லாம் அவளுக்குத் தெரியும். திருமணத்திற்கு பிறகு தாய் வீட்டிற்கு போய் என்னை விட்டு விட்டு ஒரு நாள் கூடத் தங்கியதில்லை.


எங்கள் இந்த அந்நியோன்னியத்தை பார்த்து நண்பர்கள் சிலர் எங்களுக்கு காதல் திருமணம் என்று தான் நினைப்பது உண்டு. இவ்வளவு ஏன்? சும்மா சொல்லாதீங்க அப்பா, அம்மாவும் நீங்களும் லவ் மேரேஜ் தானே என்று  நான் மனைவியைக் காதலி என்று இருக்கிறேன் முதல் நாள் முதல். எனது சொந்த வாழ்க்கையின் கஷ்ட நஷ்டம்நண்பர்கள் வட்டமாக இருக்கும் சமுக வாழ்க்கைஅடிக்கடி வெளியூர் செல்லும் எனது பணி வாழ்க்கைகோப தாபங்கள்குழந்தை போல எப்போதும் கம்பளைண்ட் செய்யும் எனது குணாதிசயம்எதிலும் பர்பெக்க்ஷன் கேட்கும் எனது வழக்கம்எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும் எனது மனைவி மிகவும் பாராட்டுக்குரியவள் தான்

 

நினைத்துப் பார்க்கிறேன். அவள் எனக்கு செய்ததில் பத்தில் ஒரு பங்கு கூட நான் அவளுக்கு எதுவும் செய்து விடவில்லை. எனது பூர்வ புண்ணிய பலன் தான், இறைவனின் வரம் தான் அவள் எனக்கு மனைவியாக அமைந்தது. அடுத்த ஜென்மங்களில் அதிக நம்பிக்கை எனக்கு இல்லை என்றாலும், எத்தனை ஜென்மங்கள் நான் மனித பிறவி எடுத்தாலும் சுகீர்த்தி எனும் இந்த தேவதை தான் எனக்கு மனைவியாக வாய்க்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. 


நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும்

No comments:

Post a Comment