Monday, July 5, 2021

நீங்கா நினைவலைகள் - 11

 நீங்கா நினைவலைகள் - 11

- பாலசாண்டில்யன் 

டிகிரி இரண்டாவது ஆண்டுக்குள் போன சமயம். நாங்கள் குடித்தனம் இருந்த ஸ்ரீனிவாச அய்யர் வீடு இடம்பத்தவில்லை. எனது அம்மா, தங்கை, பாட்டிகளுக்கு அந்த காமன் டாய்லெட் சரிவரவில்லை. மழை பெய்தால் வீடு ரொம்ப தாழ்வாக இருந்ததால் பெரும்பாலும் பூச்சி பொட்டு வந்து விடும். வீட்டுக்குள் எப்போதும் வெளிச்சம் குறைவு. இத்தனை இடைஞ்சல் இருந்ததால் வேறு வீடு பார்க்கும் படலம் தொடங்கியது. நானும் என் அம்மாவும் தெரு தெருவாகப் போவோம். நாங்கள் ஐந்து குழந்தைகள், பெரியவர்கள் மூன்று பேர் என்று சொன்னதுமே துரத்தி விடுவார்கள் வீட்டுக்கு சொந்தக்காரர்கள். ஆனால் ஏதோ ஒரு அதிர்ஷ்டம். மாம்பலம் ஸ்டேஷன் அருகில் லேக் வியூ ரோடில் (இப்போது இருக்கும் ராஜு எலக்ட்ரிகல் அருகில்) ஒரு நல்ல வீடு கிடைத்தது. அங்கே குடித்தனம் போனதால் எனக்கு நாலு எட்டில் ஸ்டேஷன். ஜாலி தான். 

நான் அடிக்கடி போகும் காசி விஸ்வநாதர் கோவில், ஹிந்தி கிளாஸ், டைப் ரைட்டிங் கிளாஸ் என்று எல்லாமே மிக மிக அருகில் என்றானது. அதே போல கடைத்தெருக்கள் எல்லாமே மிக அருகில். அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. என்னுடைய தம்பி தங்கைகளுக்கும் அது சௌகரியமாக இருந்தது. என்னுடைய அப்பாவின் அம்மா (ராஜம்மா பாட்டிக்கு ரொம்ப குஷி, அவர்களுக்கு அடிக்கடி நேஷனல் தியேட்டர் சென்று மேட்னி ஷோ பார்க்க வசதியாக இருந்தது). இப்போது இந்த வீட்டில் நாங்கள் ஏழு பேர். தவிர, இரண்டு பக்க பாட்டிகளும். பெரிய பாட்டிகள் இருவரும் பழையபடி குளித்தலை வீட்டில் இருந்தனர்.

நிற்க, என்னுடைய பாட்டு அறிவுக்கு ஒரு பின்கதை உண்டு. எனது அம்மா அப்பா அத்தைகள் எல்லோருமே மிகவும் சிறப்பாக பாடுவார்கள். அப்பா சுவாமி ஹரிதாஸ் பஜனை குழுவில் மெம்பராக இருந்து அவரோடு மேடையில் இருப்பார். என்னை ஏழு வயது முதலே ஸ்லோக வகுப்பு, மற்றும் ரேடியோ ஸ்டேஷனில் இருந்து வந்து சொல்லிக்கொடுத்த க ஜெயஸ்ரீ அக்காவிடம் பாட்டு கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து  - எல்லாமே அயோத்தியா மண்டபத்தில் தான். வகுப்புகள் இலவசம். இன்றும் ஜெயஸ்ரீ அக்காவிடம் அவரே எழுதி இசை அமைத்த "இதயமே சுவடி ஆக்கி எழுதினேன் ராமா நின் பேர் " என்ற மோகன ராகப் பாடல் நன்றாக நினைவில் இருக்கிறது. தவிர, ஸ்ரீவாஞ்சியம் முரளிதரன் பாகவதர் பஜனைக் குழுவில் அப்பா இருந்ததால் என்னையும் சில பஜனை நிகழ்ச்சிகளுக்கு வரச் சொல்லுவார். நான் முரளிதரன் பாகவதரின் முதல் சீடன் என்று எல்லோரிடமும் சொல்லுவார். என்னை வீட்டு பெயர் ரமணியை 'ரமணீஷ்" என்று கூப்பிடுவார். அவர் சொல்லிக் கொடுத்த எத்தனையோ பாடல்களில் இன்றும் எனது மனதில் நின்று போன பாட்டு "ஷண்முக நாதன் தோன்றிடுவான்" எனும் நாட்டுப்புற மெட்டில் வரும் அகத்தியர் பாடல். நிறைய சாய் நாமாவளிகள், தோடய மங்களம் என்று சில பிராசீன சம்பிரதாய பஜனைப் பாடல்கள் பாட வரும்.

இந்த பஜனை விருப்பம் என்பது எனக்கு குளித்தலையில் இருந்த பொழுதும் இருந்தது. காரணம், எங்கள் எதிரில் பண்ணை வீட்டில் (ரத்னம் அய்யர் மாமா வீடு) பந்தல் போட்டு மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் பஜனை, திவ்யநாமம், டோலோட்சவம், சீதா கல்யாணம் என்று அமர்க்களப்படும். பல ஊர்களில் இருந்து பிரபல பாகவதர்கள் வந்து பாடுவார்கள். விடியற்காலை அந்த டோலோத்ஸவம் முடிந்தவுடன் ஒரு அற்புதமான ஞானப்பால் ஒன்று தருவார்கள். அது தேவாமிர்தம் போல் இருக்கும். இன்றும் அந்த சுவையை நினைத்துப் பார்க்க முடிகிறது. அதற்காகவே நாங்கள் கண் முழித்திருப்போம். 

தவிர, அயோத்தியா மண்டபத்தில் ராமநவமி கச்சேரிகள் நடக்கும். சிறு வயது முதலே, செம்பை பாகவதர், எம் எஸ் ஜி, மதுரை மணி அய்யர், மகாராஜபுரம் சந்தானம், வயலின் சந்திரசேகர் (அப்பாவின் நெருங்கிய நண்பர் - அவருக்கு உதவிட அப்பா பல சமயம் லீவு போட்டு விட்டு எல்லா ஊர்களுக்கும் பயணித்து அவருக்கு பணிவிடை மற்றும் சேவை செய்வார்), பாலமுரளி கிருஷ்ணா (என்னுடைய மானசீக குரு), நான் மிகவும் ரசிக்கும் கே வி நாராயணசாமி, எம் டி ராமநாதன், டி கே ஜெயராமன், எம் எல் வி அம்மா, டி கே பி அம்மா, மதுரை சோமு டி என் சேஷகோபாலன், டி வி சங்கரநாராயணன்,என்று எல்லோருடைய கச்சேரிகளையும் கேட்டு கேட்டு வளர்ந்தவன். கச்சேரிக்கு அப்பா, அம்மா, சில சமயம் பாட்டி, மற்றும் எங்கள் பல உறவினர்கள் வந்து கலந்து கொள்ளுவார்கள். தெரியாத ராகம் என்றால் அவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். எனக்குள் ஒரு ஆசை உண்டு. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், அதில் நான் மழலை வயது முதலே இசைக்கு மட்டுமே என்னை அர்ப்பணித்துக் கொண்டு ஓர் இசைக் கலைஞனாக வாழ வேண்டும். நிறைய பாடல்கள் எழுதி அவற்றை நானே பாட வேண்டும் என்பதே அந்த விபரீத ஆசை.

1978-79 தான் நான் டிகிரி படித்த கடைசி வருடம். என்னுடைய வகுப்பில் இருந்து தான் கல்லூரி யூனியன் தலைவர், செயலாளர் என்று எல்லோரும் தேர்வு ஆனார்கள். தேர்தலில் எனது நண்பர்கள் வெற்றி பெற நாங்கள் நிறைய பாடுபட்டோம். (அபூர்வ ராகங்கள் முதல் சீனில் மிருதங்கம் வாசித்த, கடவுள் அமைத்து வைத்த மேடை படத்தில் மிமிக்ரி செய்த, பின்னாளில் ஸ்டெனோகிராபர் கில்ட் இன்சார்ஜ் ஆன) நண்பர் லயன் டாக்டர் சேகர், (பின்னாளில் ஹிந்து பத்திரிகையின் விளம்பரப் பிரிவின் உயர் அதிகாரியான - இப்போது மதுரையில் இருக்கும்) அன்பு நண்பர் திரு சிவசங்கர் இவர்கள் தலைமையில் உருவானது அந்த யூனியன். ஒரு பொடியனை தமிழ் துறை செயலாளர் ஆக்கினார்கள் (அது தான் இந்த பாலு - பாலா ஆனது பின்னாளில் - அப்போது க பா சு மணியன் அல்லது பாலு). பதவி ஏற்ற உடனேயே மாலைக் கல்லூரியின் தமிழ் துறை தலைவராக தேர்வு ஆன நண்பர் ராஜசிம்மனுடன் சேர்ந்து முதல் முறையாக எங்கள் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி பட்டி மன்றம் ஏற்பாடு செய்தோம்.

தமிழ் என்றாலே இவர் தான் என்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்  ஐயா அவ்வை நடராஜன் அவர்கள் தலைமையில் ஒரு பட்டிமன்றம் - அதிலே ராஜசிம்மன், சுதா சேஷன், ராமலிங்கம் என்று ஒரு நட்சத்திர பட்டியலே கலந்து கொண்டது. நிறைய பேருக்கு அப்போது என்னைத் தெரிய ஒரு நல்ல சந்தர்ப்பமாக அது இருந்தது. நண்பர் சேகர் தலைமையில் 'திடீர் நாடகம் - ஸ்கிட் - நவீன ராமாயணம்' நடந்தது. ராவணன் வில்லை உடைத்து சீதையை திருமணம் செய்து கொள்ளும் ஓர் நகைச்சுவை நாடகம். எங்கள் வகுப்பு பெரும்பாலும் அதிகபட்சம் பத்து பேர் கலந்து கொள்ளும் ஒன்றாகவே இருந்தது. ஏனெனில் வகுப்பில் எல்லோருமே பிசி. சில வகுப்புகள் இரண்டு செக்க்ஷனை கம்பைன் செய்து நடத்துவார்கள் - குறிப்பாக ஸ்டாஸ்டிக்ஸ் வகுப்பு - மறக்கவே முடியாது அந்த வகுப்பில் நாங்கள் அடித்த லூட்டிகள். 

அப்படியாக புதிய பொறுப்புகளுடன், புதிய மிடுக்குடன் (கேன்டீனில் இலவச டீ, சில நேரம் நொறுக்கு தீனி - யார் பில் கட்டுகிறார்கள் என்றெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. காலேஜ் கிரிக்கெட் மேட்ச் வேறு. அதில் எனது பால்ய சிநேகிதன் டி என் ஸ்ரீனிவாசன் தான் விக்கெட் கீப்பர், அத்லெட் போட்டியிலும் எனது வகுப்புத் தோழன் தான் வெல்லுவான். பேராசிரியர்கள் எல்லோருமே எங்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். எங்கள் நண்பர்கள் தான் கல்லூரியின் பாதி பஞ்சாயத்தை தீர்ப்பார்கள். மாணவர்கள் பிரச்சனை எதுவானாலும் நிர்வாகத்திடம் பேசி உடனே தீர்ப்பார்கள் எங்கள் தலைகள். 

இப்போது பைனல் இயர் எக்ஸாம் நெருங்கி விட்டது. 
சூடு பிடித்தது. ஒன் டே மாட்ச் போல. நாங்கள் உண்மையிலேயே படிக்க ஆரம்பித்தோம். நான் பாகராத்திரி வரை கூட முழித்து இருந்து படிப்பேன். அம்மா சில நேரம் டீ போட்டுத் தருவார். அப்பாவும் அலுவலகத்தில் நடக்கும் ஹிந்தி பரிட்சைக்கு அமர்ந்து படிப்பார். "சாகிற காலத்தில் இந்த சங்கரா சங்கராவை பாருடி" என்பார் அம்மாவிடம். நான் மிகுந்த பயத்துடன் படித்தேன். எனக்கு கிரிதர், லட்சுமண், ஜெகன்னாதன் தான் எளிமையாக சொல்லிக்கொடுத்து நம்பிக்கை தருவார்கள்.

எல்லா தேர்வுமே நல்லபடி எழுதியதாகவே நான் நம்பினேன். கடைசி பரீட்சையும்  முடிந்தது. மிக முக்கிய கட்டம் அன்று இரவே நடந்தது. நான் பாட்டிகளோடு, நண்பர்களோடு மிகவும் லூட்டி அடிக்கிறேன். தொடர்ந்து இங்கே இருந்தால் எனது எதிர்காலம் சரியாக வராது என்று ஆழமாக நம்பிய அப்பா என்னுடைய பெரிய அத்தை மற்றும் அத்திம்பேர் இருந்த பாம்பே அனுப்பி அங்கே நான் மேற்படிப்பு படித்துக் கொண்டே வேலை பார்ப்பது என்று முடிவு செய்தார். ரயில்வே பாஸ் வாங்கி அவரும் என்னை அழைத்துக் கொண்டு அன்று இரவு பாம்பே கிளம்ப ரெடி ஆனார். எனது நண்பர்களை சந்திக்கவில்லை. காலேஜ் முடித்த பிறகு நாங்கள் எல்லோரும் சந்தித்து ஒரு சின்ன டீ பார்ட்டி மற்றும் எதாவது சினிமா போகலாம் என்றெல்லாம் திட்டம் போட்டிருந்தோம். எதுவுமே நடக்கவில்லை.

நான் பாம்பே போகும் விஷயம் முழுக்க முழுக்க சர்ப்ரைஸ் ஆக இருந்ததால் நான் மிகுந்த வருத்தத்துடன் கிளம்பினேன். சென்னை தொடர்புகள் முற்றிலும் துண்டிப்பு ஆனது. மிக விரைவில் நான் உத்தியோக புருஷன். அப்போது எனக்கு பதினெட்டரை வயது. 

பாம்பேயில் என்ன ஆயிற்று? எப்படி மாறியது எனது வாழ்க்கை என்றெல்லாம் நீங்கள் அறிந்து கொள்ளலாம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடரில்.

நினைவலைகள் தொடரும்...நெஞ்சைத் தொடும். 

No comments:

Post a Comment